சமீபத்தில் வெளியான செங்களம் வெப்சீரிஸ் பரவலான பார்வையாளர்களை சென்றடைந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பஞ்சாயத்து தேர்தல் அரசியல் களத்தினையும் அதை மையமிட்டு நடக்கும் பல விசயங்களை யதார்த்தமாக எடுத்துக் காட்டியிருப்பதாக விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. நக்கீரன் ஸ்டூடியோவிற்காக இந்த வெப்சீரிஸின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் அவர்களை சந்தித்தோம். அப்போது அவர் செங்களம் வெப்சீரியஸைப் பற்றியும் சந்தானம், சூரி பற்றியும் சில தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசியதாவது “இந்தக் கதை ரத்தமும் சதையுமாக இருக்கிற ஒரு பொலிட்டிக்கல் திரில்லர். அதனால் ‘செங்களம்’ என்கிற டைட்டில் சரியாகப் பொருந்தியது. கதை விவாதத்தின்போதே வாணி போஜன் தான் இதற்கு சரியாக இருப்பார் என்று முடிவு செய்தோம். ஃபோனில் கதை சொன்னேன். உடனே ஒப்புக்கொண்டார்”.
கடந்த 30 வருட தமிழ்நாடு அரசியலை செங்களம் பிரதிபலிக்கும். என்னுடைய படங்களில் குடும்பப் பின்னணி எப்போதும் இருக்கும். இந்தப் படத்தில் அதுவும் அரசியல் குடும்பமாகவே அமைந்துள்ளது. கதை எழுதிய பிறகு தான் நடிகர்களை நான் முடிவு செய்வேன். இதில் மட்டும் கலையரசன் கேரக்டருக்காக முதலில் அமீர் சாரை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை.
கதிர்வேலன் காதல் படத்தில் முதலில் ஹீரோயினின் சகோதரராகத்தான் சந்தானம் சாரின் கேரக்டர் இருந்தது. அதன்பிறகு அது மாறியது. சூரியுடன் நீண்டகால நட்பு உள்ளது. காமெடியனாக ஆரம்பித்த அவர் இன்று விடுதலை படத்தில் முழுமையான ஹீரோவாக வந்து நிற்பது பிரமிப்பாக இருக்கிறது. அவருக்குள் ஒரு சிறந்த நடிகர் இருப்பது தெரியும். இந்த நிலைக்கு அவர் வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.