அறிமுக இயக்குனர் ஜி.ரமேஷ் இயக்கிய படம் அடவி. இந்த படத்தில் நான் மகான் அல்ல பட புகழ் வினோத் கிஷன் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் பாரதிராஜா, எஸ்.ஆர்.பிரபாகரன், தயாரிப்பாளர் சி.வி.குமார், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா, “அடவி என்பது அடர்ந்த வனம் என்பது எனக்கே தெரியவில்லை. தூய தமிழ்ச் சொல். காடுகளை நேசிக்கும் மனிதனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை இயக்க முடியும். அதுவும் குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் படத்தின் காட்சிகளைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை, மிகவும் நிறைவாக இருக்கிறது” என்று கூறினார்.
இந்த மேடையில் மேலும் பேசிய இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன், “நான்கு சுவற்றுக்குள் எடுக்கும் சினிமாவை மாற்றியமைத்தவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் அடவி திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். மலைவாழ் பகுதி மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் நாயகனாக நடித்திருக்கும் வினோத் ஒரு அற்புதமான நடிகர் அவர் மேலும் சிறக்க வேண்டும். நடிக்க தெரியாதவர்கள் எல்லாம் தற்பொழுது முன்னனி நடிகர்களாக வலம் வருகின்றனர். அது எல்லாம் காலத்தின் சூழல் தான். அந்த வகையில் வினோத் ஒரு சிறந்த நடிகர் அவர் நிச்சயமாக பெரிய நடிகராக வலம் வருவார்” என்றார்.