தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள புதிய படம் ‘தாகு மஹாராஜ்’. பாபி இயக்கியுள்ள இப்படத்தில் பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக கடந்த 12ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
இப்படத்தின் வெளியீட்டை வரவேற்ற ரசிகர்கள் திருப்பதியில் உள்ள ஒரு திரையரங்கில் ஆட்டை வெட்டி வினோத கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.
புகாரின் அடிப்படையில் ஐந்து பேருக்கு எதிராக ஆந்திரா விலங்குகள் மற்றும் பறவைகளை தடைசெய்யப்பட்ட வகையில் பலி கொடுப்பது மற்றும் விலங்குகள் மீது வன்முறை தாக்குதல் நிகழ்த்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய திருப்பதி டிஎஸ்பி வெங்கட நாராயணா, “வழக்கு விசாரணையில் ஐந்து பேரை கைது செய்துள்ளோம். மீதமுள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றுள்ளார்.