நடிகர், இயக்குனர் சசிகுமார் 'சுப்ரமணியபுரம்' படத்தில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி அறிமுகமானவர். இன்று வரை 'சுப்ரமணியபுரம்' பேசப்படுகிறது, தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. சசிகுமார் நடிப்பில் நேற்று (29-06-2018) 'அசுரவதம்' திரைப்படம் வெளியாகியுள்ளது.
தனது உறவினரும் தன் தயாரிப்பு நிறுவனமான 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் முக்கிய அங்கமுமாக இருந்தவருமான அஷோக்கின் தற்கொலைக்குப் பின் சசிகுமார் அதிகமாக செய்தியாளர்களிடம் பேசவில்லை. சமீபத்தில் சசிகுமார் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது, 'ஈசன்' திரைப்படம் வெளிவந்த பின், எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு சரித்திர கதையை உருவாக்கியதாகவும் அந்தக் கதைக்கு சூர்யா பொருத்தமாக இருப்பாரென்பதால் அவரை அணுகி அவருக்கும் கதை பிடித்திருந்ததாகவும் பின் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் அது நடக்காமல் போனதாகத் தெரிவித்தார்.
பின்னர் அதே கதையை கேட்ட விஜய், தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி 'புலி' உள்ளிட்ட சில படங்களை முடித்துவிட்டு வருவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அதுவும் தாமதப்பட சசிகுமாரும் நடிப்பில் பிஸியாகிவிட அந்த வரலாற்று கதை படமாகாமலேயே இன்னும் இருக்கிறதாம். ஆனால், இதுதான் சசிகுமாரின் கனவு திரைப்படமாம். இதை இயக்க சரியான தருணத்துக்காகக் காத்திருக்கிறார்.