இந்தியாவில் மண் சாலை ரேஸை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் படம் மட்டி. அறிமுக இயக்குநர் பிரகபல் இயக்கும் இப்படத்தை கே 7 கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கில் நடிக்கின்றனர். கே.ஜி.எஃப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூப் மட்டி படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் மட்டி திரைப்படத்தை இயக்குநர் பேரரசு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்," மட்டி படத்தின் டீசரை பார்த்த மிரட்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. இது போன்ற பிரம்மாண்டமான ,மிரட்டலான ஒரு படத்தின் டீசரைப் பார்த்து நீண்ட நாளாகி விட்டது. நான் சிறிய வயதில் 70 எம் எம் திரையில் ‘ஷோலே’ படத்தின் ட்ரைலரைப் பார்த்துப் பிரமித்தேன். அதேபோல் தமிழில் ‘ஊமை விழிகள்’ படத்தின் ட்ரைலரைப் பார்த்து வியந்திருக்கிறேன். அதன்பிறகு‘ மட்டி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து மிரண்டேன். மட்டி என்றால் மண் என்றார்கள். இது மண் அல்ல வைரம், வைடூரியம், பிளாட்டினம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இது போன்ற படங்கள்தான் அதிகம் வர வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் 10மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.