Skip to main content

"கேப்டன் குடிக்கல... அவர் ட்ரீட்மெண்ட்ல தப்பு நடந்துருக்கு!" - விஜயகாந்த் டைரக்டர் நெகிழ்ச்சி

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

விஜயகாந்த்... தமிழகத்தின் அரசியல் களமும் சினிமா துறையும் பல்வேறு காரணங்களுக்காக மிஸ் பண்ணும் முக்கிய மனிதர். சமீபத்தில் நடந்த அவரது பிறந்தநாள் விழா ஒன்றில் குழந்தைகள் அவருக்கு வாழ்த்து சொல்லி இனிப்பூட்டிக் கொண்டாடினர். அந்த விழாவில் இருந்தது, சினிமா துறையும் ரசிகர்களும் பார்த்த கம்பீரமான பழைய கேப்டன் இல்லை. உடல்நிலையால் நெகிழ்ந்து, கனிந்து சற்றே தளர்ந்து காணப்பட்டார். அவருடன் பணிபுரிந்தவர்கள் பயணித்தவர்கள் பலருக்கு அந்தக் காட்சி நெகிழ்ச்சியை உண்டாக்கியது. விஜயகாந்த் அரசியலுக்கு வர முடிவு செய்து, ஆனால் அறிவிக்கும் முன்பு அரசியல் செல்லும் பாதையாக ரமணா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அந்த வரிசை படங்களில் ஒன்று 'தென்னவன்'. தேர்தல் அதிகாரியாக விஜயகாந்த் நடித்த அந்தப் படத்தின் இயக்குனரும் அதற்கு முன்பே பல விஜயகாந்த் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவருமான நந்தகுமார் நமக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில் தங்கள் கேப்டன் குறித்த பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

 

director nandakumar



"தென்னவன் படத்துக்காக சென்னையின் பிஸியான பல பகுதிகளில் சண்டைக்காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகளை ஷூட் செய்தோம். அப்படி ஒரு காட்சிக்காக பாரிஸ் கார்னர் பகுதியில் ஷூட்டிங் நடத்தினோம். கட்டிடங்களின் விளிம்பில் தாவித் தாவி செல்லும் ஒரு காட்சி. அந்தக் காட்சியில் உயரமான ஒரு கட்டிடத்தின் மாடியில் இரும்புக் கம்பியை பிடித்து சுத்தி வரணும். இந்த ஆபத்தான காட்சிக்கு நாங்க டூப் ரெடி பண்ணி வச்சிருந்தோம். ஷூட்டிங்க்கு வந்த கேப்டன், ஸீன் பற்றி எல்லாம் கேட்டுட்டு, 'எதுக்கு டூப்?'னு கேட்டார். நான் காட்சியில் உள்ள ஆபத்தை சொன்னேன். 'அப்ப, டூப் மட்டும் மனுஷன் இல்லையா? அவனுக்கு குழந்தை குட்டி இல்லையா?'னு கேட்டு எவ்வளவு சொல்லியும் ஒத்துக்கொள்ளாமல் அவரே அந்தக் காட்சியை ரொம்ப சுலபமாக செய்து முடித்தார்.

நான் உதவி இயக்குனராக இருக்கும்போதும் கூட சண்டைக்காட்சிகளில் அவரேதான் பெரும்பாலும் நடிப்பார். உண்மையை சொல்லப்போனால், டூப் போட்டு நடிப்பவர்களால் கூட கேப்டன் அளவுக்கு நடிக்க முடியாது. அவ்வளவு அழகாக, திறமையாக, நேர்த்தியாக சண்டைக் காட்சிகளில் நடிப்பார். சேதுபதி ஐ.பி.எஸ். படத்தின் ஆரம்பக் காட்சி ஒன்றில் ரெண்டு பேர் கையெறி குண்டை பந்து மாதிரி போட்டு விளையாடிக்கொண்டே இவரைக் கொல்ல வருவார்கள். அந்தக் காட்சியில் மாருதி ஜிப்ஸி வண்டியில் இருந்து ஜன்னல் வழியாக இவர் குதித்துத் தப்பிக்க வேண்டும். இப்போலாம் CG இருக்கு. அப்போ அது ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த வண்டியின் அமைப்பு அப்படி இருக்கும். ஆனால், இவர் அதை ஒரே தடவையில் ரொம்ப எளிதாக செய்தார். பீச் ரோட்டுலஇந்தக் காட்சியை எடுத்தபோது சுற்றி ஷூட்டிங் பார்த்த மக்கள் எல்லோரும் கைதட்டினர். எனக்கு ரொம்ப ஆச்சரியம். பல படங்களில் சண்டைக் காட்சிகளை அவரே கம்போஸ் செய்வார். ஒரு ஸ்டண்ட் மேன் உயரத்துல இருந்து குதிச்சா எங்க விழுவார், அவருக்கு எங்க சேஃப்டி வைக்கணும் இப்படி எல்லாமே தெரிந்தவர்.

 

 

sethupathi ips vijayakanth



இப்படி இருந்த கேப்டன் இன்னைக்கு கைத்தாங்கலாக நடந்து வரும்போது பாக்க கஷ்டமாக இருந்தது. அவர் கடவுள் பக்தி அதிகமாக உள்ளவர். நான் முன்பு அவரை கோவிலில் சந்திக்கும்போது என்னையும் கூட்டிட்டுப் போயி அர்ச்சகர்கிட்ட அறிமுகம் செய்து எனக்காக திரும்ப பூஜை பண்ணுங்கன்னு சொன்னார். அரசியல் காரணங்களுக்காக அவர் குடிக்கிறார், அதுனால உடம்பு கெட்டுப்போச்சு என்றெல்லாம் தவறாக பரப்பிட்டாங்க. எனக்குத் தெரிந்து அவருக்கு தைராய்டு பிரச்சனை இருந்தது. முதலில் அவர் சென்ற மருத்துவமனையில் சிகிச்சையில் ஏதோ தவறு நடந்துருச்சு. அதுக்கப்புறம் வேற மருத்துவமனை போனார். இப்படி மாறி மாறிப் போயி நேரத்துக்கு பத்து, பதினைந்து மாத்திரை எடுத்துக்கொண்டதால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடம்பை அப்படி பார்த்துக்கொண்ட மனிதர் இன்னைக்கு நடக்கும்போது தடுமாறி விழுவதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு.

அவரோட பிறந்தநாள் விழாவுக்குக் கூட கேக் வெட்டுவதற்காக எல்லாம் அவர் வந்திருக்கமாட்டார். நலத்திட்ட உதவி கொடுக்குறோம் என்பதால் வந்திருப்பார். இப்படி நானா நினைச்சுக்கிட்டேன். ஏன்னா, இப்போது என்றில்லை, அப்போ 'கூலிக்காரன்' ஒரு படத்தோட ஷூட்டிங் நடந்தப்போ அவரோட பிறந்தநாள். அன்னைக்கு ஆயிரக்கணக்குல மக்கள் கூடிட்டாங்க. தையல் மிஷின், அது இதுன்னு மக்களுக்கு எக்கச்சக்கமா உதவினார். அன்னைக்கு சோசியல் மீடியாவெல்லாம் இல்லை. பேப்பர்ல கூட இதெல்லாம் பெருசா போடமாட்டாங்க. ஆனா, அப்போதும் அவர் அவ்வளவு செய்தார்."

 

 

        

சார்ந்த செய்திகள்