பிரபல இயக்குநரும் , நடிகருமான அமீர் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதையை வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் கரு.பழனியப்பன், அசார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், கரு பழனியப்பன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் அமீர்," எனக்கு மல்டி ஸ்டாரர் படம் பண்ணனும்னு ஆசை. அதனால்தான் வெற்றிமாறனுடன் சேர்ந்து 'இறைவன் மிக பெரியவன்' படம் பண்றேன். இஸ்லாமிய சமூகம் ஒரு தீவிரவாத சமூகமாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இதைப் பற்றி பேச யாரும் இல்ல. நான் எடுத்த படங்களான 'பருத்திவீரன்', 'மௌனம் பேசியதே' 'ராம்' போன்ற படங்கள் கூட வேறு மாதிரியான படம் தான். ஏன்னா இன்றைய காலகட்டத்தில் வரக்கூடிய இயக்குநர்கள் வந்த உடனே எதை அடையாளப்படுத்துகிறார்கள் என்றால், தான் சார்ந்து இருக்கக்கூடிய சாதி, மதம், அல்லது அரசை அடையாளப்படுத்துகின்றனர். இதுதான் இன்றைய சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டாக இருக்கு. அதை நீங்க படத்தின் டைட்டிலில் இருந்து கூட பார்க்கலாம், ஆனால் நான் இயக்குகிற 'சந்தனத் தேவன்', நடிக்குற 'நாற்காலி' படங்கள் எதுமே என் சமூகத்தை சார்ந்தது கிடையாது. அப்போ என்ன சந்திக்குறவங்க எல்லாம் நீங்க நம்ம சமூகத்துக்காக ஒண்ணுமே பண்ண மாட்டீங்கன்னு கேப்பாங்க, ஒரு படம் எடுத்து தான் இந்த சமூகம் குற்ற சமூகம் இல்லைனு சொல்லணுமா. அவ்வளவு மக்காவா இருக்கு இந்த சமூகம். இத சொல்லி புரிய வைக்கிறதுக்கு நெனச்சேன். அதனால எனக்கு இதுல பெரிய உடன்பாடு இல்லை. ஆனால் இந்த காலகட்டம் நம்மை அதை நோக்கி தள்ளி இருக்கிறது. நான் இந்த கதையில் எதையும் பார்க்கல. இது எனக்கும் கரு. பழனியப்பனுக்குமான உறவு, எனக்கும் வெற்றிமாறனுக்குமான உறவு, இந்த உறவு எப்படி இருக்கு, அதைத்தான் இந்த படம் சொல்ல போகுது " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் தினமும் ஐந்து முறை தொழுபவன், கரு பழனியப்பன் கடவுள் மறுப்பாளர், ஜனநாதன் கம்யூனிஸ்ட் நாங்கள் மூன்று பேரும் ஒன்னாவே இருப்போம், ஒன்றாக சாப்பிடுவோம், எனக்கு பிராமண சமூகத்தை சேர்ந்த நண்பரும் இருக்கிறார். அவர் என் வீட்டுக்கு விருந்துக்கு வருவார், நான் அவர் வீட்டுக்கு விருந்துக்கு செல்வேன். இதுல எங்கே இருக்கிறது சாதி மதம்னு எனக்கு தெரியல. கரு பழனியப்பனும், ஜனநாதனும் சாப்டுட்டு இருப்பாங்க, இருங்க நான் போய் தொழுதுவிட்டு வரேன்னு சொல்லிட்டு வந்து உக்காருவேன். இந்த புரிதலில் தான் இந்த சமூகம் இயங்குது, இப்படி இயங்கி கொண்டிருக்கும் சமூகத்தை மொழி, சாதி, மதம், நிறம் உள்ளிட்டவைகளை வைத்து பிரிக்கின்றன. இது இந்த தேசத்திற்கோ, மண்ணிற்கோ, உலகத்திற்கோ தேவையில்லை. அதை தான் நாங்கள் சொல்ல வருகிறோம். நீ அரசியல் செய், காசு திருடுறியா திருடு, பொய் பேசுறியா பேசு, என்னவேணுமோ செய், அதுக்கு ஏன்டா எங்கள சாகடிக்கிற, நாங்கள் இங்க நல்லா தான இருக்கோம். அண்ணன் தம்பியா சந்தோசமாதான இருக்கோம். நீங்கள் பார்த்த நிகழ்வுகளைத் தான் இந்த படத்தில் நான் கொண்டு வரவே போறேன், அதுதான் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படம் " எனக் கூறியுள்ளார்.