இயக்குநர் அமீர், வெற்றிமாறன் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட சினிமா அரசியல் ஆளுமைகள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பை கண்டித்து இந்த சந்திப்பில் பேசினர்.
இயக்குநர் அமீர் பேசுகையில், "உலக வரலாற்றில் ஒரு பாரம்பரிய விளையாட்டுக்கு ஒரு அரசு தடை விதித்து, அந்த தடையை எதிர்த்து ஒரு மாநிலத்தில் ஒட்டுமொத்த மக்களும் தன்னெழுச்சி பெற்று நடந்த போராட்டம் தான் 2017ல் நடந்த ஜல்லிக்கட்டு. இந்த போராட்டத்தால் தமிழக அரசே நேரடியாக முன் வந்து சட்டமேற்றி ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறச் செய்வதற்கான ஒரு வரலாற்று நிகழ்வு இந்த தமிழக மாநிலத்தில் நிகழ்ந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் பிறகு தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தாலும், இதனைத் தடை செய்ய விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது, வதை செய்யப்படுகிறது, இதனால் மனிதர்கள் இறக்கிறார்கள் உள்ளிட்ட காரணங்களை ஒரு ஆங்கில இந்து பத்திரிகைகள் குறிப்பிட்டதை ஆதாரமாக சொல்கிறார்கள். இந்த ஆதாரம் அடிப்படையிலான வாதங்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன. இதனால் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நோக்கி காத்திருக்கின்றோம். இந்த தீர்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை, அப்படி வந்தால் ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக வருமா என்பது இன்னும் ஒரு அய்யப்பாட்டில் தான் இருக்கிறது.
இந்த சூழலில் அவர்கள் நீதிமன்றத்தில் வைத்த வாதங்கள் , ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய விளையாட்டு கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் சங்க இலக்கியங்களிலே ஏறுதழுவுதல் குறித்து இடம் பெற்றிருக்கிறது. உலகத்திலே ஒரு பாரம்பரிய விளையாட்டு ஒன்று உள்ளது என்றால் அது ஜல்லிக்கட்டு தான். ஆனால் இன்றைக்கு என்ன கொடுமை நடக்குது என்று சொன்னால் , நம்மை ஆளுகின்ற அரசு, அதிகாரத்தில் உள்ள ஆளுநர் போன்றோர்கள் ஆன்லைன் ரம்மிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். தடை செய்ய வேண்டிய சூதாட்ட விளையாட்டுகளுக்கெல்லாம் அனுமதி கொடுத்துவிட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை, பாரம்பரிய விளையாட்டே கிடையாது என வாதங்களை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் நாங்கள் வைக்கின்ற கோரிக்கை என்னவென்றால், இந்த வருடம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற வேண்டும். அது நடைபெறும். ஆனால் அடுத்த வருடம் நடைபெறுமா என ஒரு அச்சம் நிலவுகிறது. இதனால் இந்த இடைப்பட்ட காலத்திற்குள் மத்திய அரசு ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அது தான் எங்களுடைய நோக்கம்" என்றார்.