த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களின் இயக்குனராக, சர்ச்சைக்குரிய ஒருவராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர், தற்போது அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவர இருக்கும் நிலையில் அவரை சந்தித்தோம். அஜித்துடனான தனது முதல் சந்திப்பு குறித்து அவர் பகிர்ந்தது...
“அஜித் சாருக்கு திருப்தி இல்லை என்றால் உங்களை அடுத்த சீனுக்கு போக விட மாட்டார். ஒன் மோர் கேட்டுக்கிட்டே இருப்பார். வினோத் சாரே இதுவே போதும் சார் என்று சொன்னாலும் கூட அவரே 'நான் இதை சரியா பண்ணுவேன்' என்பார். அவர் பேசும் வசனங்களில் ஒரு வார்த்தை விட்டுவிட்டால் கூட டப்பிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல மாட்டார். திரும்பி முதலில் இருந்து அந்த வசனத்தை பேசுவார். அப்படி அவர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவர் இருக்கும் நிலைக்கும், ஸ்டேடஸ்க்கும் அவர் பண்ண வேண்டிய அவசியமில்லை. ஆனால், பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பார்.
முதல் முறை அஜித் சாரை பார்ப்பதற்காக நாங்கள் மூன்று பேரும் கிளம்பி சென்றோம். இரவு முழுக்க நான் இவர்களிடம் அஜித்தை பார்க்க போகிறேன் என்று புலம்பி தள்ளிவிட்டேன். அஜித் சாருக்கு போட்டோஷூட் நடந்துகொண்டிருந்தது. உள்ளே சென்றார்கள் நான் மட்டும் செல்லவில்லை. எனக்கு அவரை முதலில் பார்க்கும்போது ஒரு ஹீரோ எண்ட்ரீ போலத்தான் இருந்தது. முதலில் அவரின் கையை பார்த்தேன், பின் அவரது முகத்தை முழுமையாகப் பார்க்காமல் சின்னதாக ஒரு ஓட்டையில் பார்த்தேன். ஒரு போஸில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். நான் சுத்தமாக ஆஃப் ஆகிவிட்டேன்.
அதன் பின் மீட் பண்ணும்போது கை கொடுத்து, கட்டிப்பிடித்தார். எனக்கு இன்ப அதிர்ச்சியாகிவிட்டது. உடனடியாக அந்த இடத்திலிருந்து ஓடிப்போய் சுவற்றில் சாய்ந்துவிட்டேன். பின்னர், அஜித் சாரே என்னிடம் வந்து என்ன ஆச்சு என்று கேட்டார். நான் ஒன்னுமில்லை என்றவுடன் மீண்டும் கட்டிப்பிடித்தார். நான் அவ்வளவுதான் அந்த நிமிடத்திலிருந்து காலி”.