தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையான நடிகராக வலம் வருகிறார் தனுஷ். நடிகர் மட்டுமல்லாது பாடகராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பன்முகக் கலைஞனாக இருந்து வருகிறார். அசுரன் படத்திற்குப் பிறகு நூறு கோடி வசூல் செய்யும் நாயகர்களின் பட்டியலிலும் இணைந்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தான் படித்த டீச்சர்கள் ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து மேடையில் கும்பிடு போடுவதாகச் சொல்லியிருந்தார். அவர் பேசியது விளக்கமாகப் பின்வருமாறு...
என் அம்மா அப்பாவின் ஆசீர்வாதங்களும் வேண்டுதல்களும் ரசிகர்களின் கைதட்டல்களாகவும் கூச்சல்களாகவும் மாறியிருக்கிறது. இதற்கு நான் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கனும். வாத்தி படம் 90களில் நடக்கிற கதை. இதுல வேடிக்கை என்னவென்றால் 90களில் நான் ஸ்டூடண்ட். இப்ப 90களின் ஸ்டூடண்டுக்கு நான் புரொபசரா நடிச்சிருக்கேன். காலம் அவ்ளோ வேகமா ஓடுது; ஜூலை வந்தால் 40 வயசாகப் போகுது.
நான் ஸ்டூடண்ட்டா பெஞ்சில் இருக்கும் போது போர்டு அருகே நிற்கிற டீச்சர்களைப் பார்க்கும் போது தோணும்... இந்த வேலை எவ்வளவு ஈசி., நேரத்துக்கு வரலாம்; போகலாம்; எதுக்கும் பர்மிசன் கேட்கணும்னு அவசியம் இல்லைன்னு. இந்த படத்திற்காக நான் போர்டு முன்னாடி நிற்கும்போது தான் தெரியுது., இந்த வேலை எவ்ளோ கஷ்டம்னு... படப்பிடிப்புக்காக நான் சாக்பீஸ் பிடிச்சு எழுதும்போது எங்கேயோ கோணலா கண்றாவியா போகுது... அப்பதான் புரிஞ்சது நம்ம டீச்சர்களோட கையெழுத்தில் தான் நம்ம தலையெழுத்தே இருக்குதுன்னு. அப்ப தான் புரிஞ்சது என்னோட எல்லா டீச்சர்களுக்கும் பெரிய கும்பிடு போடணும்னு. எனக்கு பிடிச்ச டீச்சர்; என்னைய டார்ச்சர் பண்ண நான் டார்ச்சர் பண்ண டீச்சர்; எல்லாருக்கும் பெரிய கும்பிடு போட்டுக்கிறேன்.