
திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் நடைபெறும் நிலையில் இந்தாண்டும் நடைபெற்றுள்ளது. அமெரிக்கா லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த விழா இந்தாண்டும் கோலாகலமாக சிவப்பு கம்பள வரவேற்புடன் நடைபெற்றது.
டால்பி தியேட்டரில் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில் வழக்கம் போல் திரைப் பிரபலங்கள் ஆர்வத்துடனும் மகிழ்சியுடனும் கலந்து கொண்டனர். இதில் ஹாலிவுட் நடிகர் கை பியர்ஸ், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் சம்பந்தமாக பாலஸ்தீனத்திற்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ‘Free Palestine’ என்ற வாசகம் அடங்கிய பேட்ச் ஒன்றை தனது ஆடையில் அணிந்திருந்தார். இந்தாண்டு ஆஸ்கர் விருது விழாவில் இஸ்ரேல் - பாலஸ்தீன சம்பந்தமாக இதுதான் முதல் எதிர்ப்பு என பார்க்கப்படுகிறது. இவர் ‘தி ப்ரூட்டலிஸ்ட்' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருந்தார். ஆனால் விருது வெல்லவில்லை. இவர் இதே ‘Free Palestine’ பேட்சை ‘தி ப்ரூட்டலிஸ்ட்’ பட சிறப்பு காட்சி லண்டனில் கடந்த மாதம் நடந்த போது அணிந்து வந்திருந்தார்.
இந்த ஆண்டு போல் கடந்த ஆண்டும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரைப் பிரபலங்கள் இருந்தனர். கடந்த ஆண்டு சிவப்பு கம்பள வரவேற்பில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ஆர்டிஸ்ட்ஸ் 4 சீஸ் ஃபையர் (Artists4Ceasefire) அமைப்பினுடைய ஒரு சின்னத்தை திரைப் பிரபலங்கள் தங்களது ஆடையில் அணிந்து தங்களது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.