2014 ஆம் ஆண்டு 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பாக சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் தனுஷ் புகைப் பிடிக்கும் காட்சி வரும்போது எச்சரிக்கை வாசகம் முறையாக இடம்பெறவில்லை எனவும் தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு தயாரிப்பு நிறுவனம் மீதும் தனுஷ் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் மீது நடவடிக்கை வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகிய இருவரின் தரப்பும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.
பின்பு தனுஷுக்கு எதிரான இந்த புகார் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பு, சிகரெட்டை விளம்பரப்படுத்தவில்லை என்றும் அப்படி விளம்பரம் எனக் கூறப்படும் காட்சி தயாரிப்பாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது. மேலும் புகார் தொடர்பாக விளக்கமளிக்க எந்த ஒரு வாய்ப்பும் வழங்காமலேயே வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்ய முடியாது என்றும் வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.