"இதுதான் நான் படிச்ச ஸ்கூல்..." என்று சொல்லிக்கொண்டே படத்தின் முதல் காட்சியில் என்ட்ரி கொடுத்த அந்தப் பையனைப் பார்த்து அன்று கேலியாக சிரிக்காதவர்கள் சிலர் மட்டுமாகத்தான் இருக்கும், அதே பையனைப் பார்த்து, இன்று வியக்காதவர்கள் வெகு சிலராகத்தான் இருக்கும். அந்தப் படம் 'துள்ளுவதோ இளமை', அந்தப் பையன் தனுஷ்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருக்க தோற்றம் தேவையற்றது, திறமை போதுமானது என்று நிரூபித்துக்காட்டியவர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். அவருக்கு முன்பே கறுப்பாக இருப்பவர்கள், குண்டாக இருப்பவர்கள் என பலரும் நாயகர்களாக வென்றிருந்தாலும், தனுஷ் முற்றிலும் புதிய வகை நாயகன். அத்தனை ஒல்லியான நாயகனை தமிழ் சினிமா அதுவரை பார்த்ததில்லை. 'துள்ளுவதோ இளமை' படத்தை அவருடைய அப்பா இயக்க அதில் நோஞ்சான் உடம்பை வைத்துக் கொண்டு பள்ளி மாணவனாக நடித்திருப்பார் பிரபு. ஆம், திரைப்படத்துக்காக இவரது பெயர் தனுஷ் ஆனது. தனுஷின் அண்ணன் செல்வராகவன்தான் இந்தப் படத்தை இயக்கினாலும்வியாபார காரணத்துக்காக தந்தை பெயர் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடினாலும் தனுஷின் தோற்றம் கிண்டல் செய்யப்பட்டது. அதுவும் முதல் காட்சியிலும் கடைசியிலும் ஒட்டு மீசை வைத்துக்கொண்டு நோஞ்சான் உடம்புடன் ஆர்மி மேனாக வந்திருந்ததை சிரித்துக்கொண்டுதான் பலர் பார்த்தார்கள்.
படத்தில் இசை, ஒளிப்பதிவு, கதை என பல விஷயங்கள் சிறப்பாக இருந்தாலும் படம் வெற்றி பெற்றதற்கு வேறு காரணங்களும் இருந்தன. தனுஷ்-ஷெரின் நெருக்கம், பாடல்கள், மாணவ பருவ கலாட்டாக்கள் என இந்தப் படம் வேறு விதமாகவே வெளிப்பட்டு வெற்றியும் பெற்றது. இது போன்ற கதையில் நடித்ததால் மட்டுமே இப்படம் ஓடியது, கதாநாயகனுக்காக இல்லை என்றும் தனுஷ் முதல் படத்தோடு வெளியேறிவிடுவார் என்றுமே பெருமளவில் கணிக்கப்பட்டது. ஆனாலும், துள்ளுவதோ இளமை ஒரு ட்ரெண்ட் செட்டராகி அதற்குப் பின் ஒரு பத்து படங்களாவது பள்ளிப் பருவம், ஐந்து நண்பர்கள் போன்ற கதையைக் கொண்டு வெளிவந்து தோற்றன.
துள்ளுவதோ இளமை வெற்றிக்கு அடுத்து, அண்ணன் செல்வராகவன் இயக்க தம்பி தனுஷ் நடித்த படம் 'காதல் கொண்டேன்'. முதல் படத்தில் இருந்ததை இதிலும் எதிர்பார்த்துப் போனவர்களுக்கு கிடைத்தது பெரும் அதிர்ச்சி. ட்ரெய்லர் தீம் இசையிலேயே 'இது வேற மாதிரி இருக்கே' என்ற உணர்வை அளித்த படம், வெளிவந்தபோது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்ப அதிர்ச்சி அது. இவர்களிடமிருந்து இப்படி ஒரு படமா... இந்தப் பையனுக்குள் இப்படி ஒரு நடிகனா... இசை ஒரு படத்தில் இத்தனை பங்காற்ற முடியுமா என்ற அதிர்ச்சி. தனுஷ்-செல்வராகவன்-யுவன் அளித்த அந்தத் தாக்கம் தமிழ்த்திரையுலகில் சில ஆண்டுகள் நீடித்தது. கமல்ஹாசன், பாரதிராஜா, பாலுமகேந்திரா என அந்தப் படத்தைப் பற்றி அனைவரும் பேசினர். இந்தக் கதைக்கு ஏற்ற தோற்றம் தனுஷிடம் மட்டும்தான் அப்போது இருந்தது. முகத்தில் தாடியுடனும், புட்டிக் கண்ணாடியுடனும் அந்தப் பையன் க்ளைமேக்ஸுக்கு முன் 'திவ்யா...திவ்யா...' என்று போட்ட ஆட்டம் தமிழகத்தை உண்மையில் அதிர வைத்தது. ஒரு ஆதரவற்ற இளைஞனின் மனம் தேடும் அன்பு, அது கைநழுவித் போகும்போது அடையும் ஏமாற்றம் என உளவியலை வெகு நேர்த்தியாகப் பேசியிருந்தது காதல் கொண்டேன். அதில் தனுஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. மீண்டும் இவர் ஒரு படம் நடித்தால், அதை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்தது. படமும் மிகப் பெரிய வெற்றி. ஆனாலும், இவரால் வெகுஜனத்தை சாதாரண மக்களை கவரும் வண்ணம் ஒரு படம் நடிக்க முடியாது என்றே எண்ணப்பட்டது.
அதற்கும் அட்டகாசமாக பதில் கொடுத்தார் இந்த 'மன்மதராசா'. தன்னைக் குறித்த கணிப்புகளை தொடர்ந்து உடைத்தெறிந்தார், தனுஷ். நன்றாக சென்றுகொண்டிருந்த போது தானே தடுக்கி விழுந்தது போல புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களில் நடித்தார். 'இவன்லாம் ஒரு ஹீரோவா...' என்று அன்று பேசியவர்களுக்கு இன்று காரணம் கிடைத்தது. இதுவரை கணிப்புகளை எல்லாம் உடைத்து வந்தவருக்கு ’சுள்ளான்’ மிகப்பெரிய சறுக்கலை கொடுத்தது. ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில் இந்தியன் புரூஸ்லீ என்ற அடைமொழியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டது, பலரையும் தூண்டிவிட்டது.
இன்னொரு பக்கம் சிம்புவின் நேரடி போட்டியாளர் என்ற பெயர் வேறு. இருவருமே பெரிய அளவில் வளராத போதே வளர்ந்த 'ரைவல்ரி' பக்குவமான சினிமா ரசிகர்களை முகம் சுளிக்கவைத்தது. சிம்பு இவருக்கு பன்ச் கொடுக்க, இவர் அவருக்கு பன்ச் கொடுக்க என்று இருவரும் சில காலம் ரசிகர்களுக்கு பன்ச் கொடுத்தனர். ’ட்ரீம்ஸ்’, ’தேவதையை கண்டேன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’ என்று போன பாதை மீண்டும் ’புதுப்பேட்டை’யில் சரியானது. அன்று பெரிதாய் வெற்றி பெறாத புதுப்பேட்டை இன்று எந்த தியேட்டரில் சிறப்புக் காட்சி போட்டாலும் நிறைகிறது, கொண்டாடப்படுகிறது. மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வந்த தனுஷ், தன் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே போனார் வெற்றிகரமாக. பாடினார், பாடல் எழுதினார்... உலகமே பாடிய 'ஒய் திஸ் கொல வெறி'யை ஏற்காதவர்கள் கூட 'பிறை தேடும் இரவிலே உயிரே'வை ஏற்பார்கள்.
கலையில் மட்டுமல்லாமல் நடித்த மொழியிலும் எல்லையை விரிவு படுத்தினார். தேசிய விருது வாங்கிய கையோடு 'ஒய் திஸ் கொலவெறி' கொடுத்த உலகப்புகழும் சேர்ந்து தனுஷை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றது. ஆம், தமிழ் படங்களில் மதுரை பையனாகவும், சென்னை பையனாகவும் வளம் வந்தவர். பாலிவுட்டுக்கு சென்று வாரணாசி பையனாக நடித்து, பாலிவுட் பாக் ஆபிசில் சேர்ந்தார். இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் கூட இவரது வெற்றி தொடர்ந்தது. 'இவன்லாம் ஹீரோவா...' என்று பேசியவர்கள் இன்று இவர் நடித்த ஹாலிவுட் படமான 'எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் ஃபக்கீர்'ரின் போஸ்டர்களைப் பார்த்து செல்கின்றனர்.
திறமை வாய்ந்த நடிகரான தனுஷ் சர்ச்சைகளிலும் குறைந்தவரில்லை. ரஜினிகாந்த்தின் மகளைத் திருமணம் செய்யப் போகிறாரென்ற செய்தி வந்த போது ரஜினி ரசிகர்கள் குழம்பித்தான் போயினர். அந்த செய்தியை முதலில் ரஜினி அறிவிக்காமல் கஸ்தூரி ராஜா மட்டும் அறிவித்தது இன்னும் குழப்பத்தை அதிகமாக்கியது. அதற்கு முன்னரான கிசுகிசுக்களெல்லாம் சேர்த்துவைத்து கிண்டல் செய்யப்பட்டனர் இருவரும். ரஜினிக்கு இவர் மருமகனா என்றெல்லாம் கூட பலர் பேசினர். ஆனால், இன்று இவர் ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறார். சிம்பு-தனுஷ் ரசிகர்கள் சண்டையெல்லாம் சிரிப்பையும் வெறுப்பையும் வரவைத்தது. தொடர்ந்து வேலை வெட்டியில்லாமல் காதல் செய்யும் விடலைப் பையனாக இவர் நடித்தது எந்த அளவுக்கு இவரை இளைஞர்களுக்கு நெருக்கமாக்கியதோ அந்த அளவுக்கு விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது. இப்போதைய ஸ்ரீலீக்ஸ் போல் அப்போதைய சுச்சி லீக்ஸ் வெளியாகி பரபரப்பான போது அதிகம் பேசப்பட்டவர் தனுஷ்தான். 'தனுஷ்' எங்கள் மகன் என்று ஒரு வயதான தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இன்னொரு பரபரப்பு. இப்படி சர்ச்சைகளோடுதான் இப்போதுவரை வளம் வருகிறார் தனுஷ். ஆனாலும், ‘வடசென்னை’, ‘அசுரன்’ என கதைதேர்விலும் நடிப்பிலும் கைதேர்ந்து, சர்ச்சைகள், சரிவுகள் தாண்டிய உயரத்தை நோக்கி தொடர்ந்து அவர் முன்னேறுவதை யாராலும் மறுக்க முடியாது. தன்னை நோக்கிய ஏளனங்களை, கணிப்புகளை தொடர்ந்து உடைத்தெறிந்து மேலே செல்கிறார் இந்த இந்தியன் ப்ரூஸ்லீ.