கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் உருவாகுவதாக கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. சிம்புவின் 48வது படமாக இப்படம் உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டது. படத்தின் பணிகள் மே முதல் தொடங்கப்பட்டது. இப்படத்திற்காக சிம்பு வெளிநாடு சென்று பயிற்சி செய்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இருப்பினும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு போஸ்டர் வெளியானது.
அதில் இரண்டு கெட்டப்புகளில் சிம்பு இடம்பெற்றிருந்தார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் வரலாற்று பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த மாஸ் படமாக இருக்குமென திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து இப்படத்தில் இருந்து கமல் விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு படத்தின் பட்ஜெட்தான் காரணம் என சொல்லப்பட்டது. இதனால் புது தயாரிப்பாளர்களை சிம்பு மற்றும் தேசிங் பெரியசாமி தேடி வருவதாகவும் பரவலாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக இப்படத்தின் கதை அஜித்துக்கு செல்வதாக ஒரு தகவல் உலா வந்தது.
இத்தகவலை மறுக்கும் வகையில் தேசிங் பெரியசாமி சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இப்படத்தில் சிம்புதான் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் படக்குழுவிடம் இருந்து படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.