‘சிந்துநதிப் பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவர் கடந்த 2003ஆம் ஆண்டு பீஷ்மர் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
இதனையடுத்து, நீண்ட நாட்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ரஞ்சித், சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில், ரஞ்சித் தற்போது ‘கவுண்டம்பாளையம்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த டீசரில் மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்தியிருப்பதாகவும், விசிக தலைவர் திருமாவளவனை தாக்கி பேசியிருப்பதாகவும் கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் படம், நாளை (05-07-24) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை வெளியாகாது என ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “கவுண்டம்பாளையம் திரைப்படத்தை வெளியிடக்கூடாது எனத் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், நாளை படம் வெளிவராது. இது தொடர்பாக சென்னைக்கு சென்று அங்கு அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளேன்” என்று கூறினார்.