சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா...’ லிரிக் வீடியோ கடந்த மாதத் தொடக்கத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெளியான 'ஹூக்கும்...', 'ஜூஜூபி...' உள்ளிட்ட பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் கடந்த மாதம் 28 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களையும் படக்குழு வெளியிட்டது.
ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிறப்பு மற்றும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படவில்லை. காலை 9 மணிமுதல் தான் காட்சிகள் தொடங்குகிறது. யு/ஏ சான்றிதழுடன் வெளியாகிறது. இந்தியாவில் இன்று முதல் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்குகின்றன. வெளிநாடுகளில் பிரீ புக்கிங்கில் வசூல் சாதனை செய்து வருகிறது. அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் ரூ.3 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் ஒரு ரசிகர் பல்க்காக டிக்கெட் முன்பதிவு செய்து, அதை வீடியோவாக வெளியிட்டு தனது ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் நிறுவனம் ஜெயிலர் படத்திற்காக வருகிற 10 ஆம் தேதி அலுவலகத்திற்கு விடுமுறை அளித்துள்ளது. மேலும் தங்கள் அலுவலக ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதேபோல் அவர்களது கிளை அலுவலகங்களான சென்னை, திருச்சி, திருநெல்வேலி என 8 அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து இலவச டிக்கெட் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ரஜினிகாந்த் வாழ்க' எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் அந்த அலுவலகங்களின் ஊழியர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.