மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.
இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பாராட்டினர். அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றி பேசியிருக்கும் இப்படம் பல நிஜ சம்பவங்களை நினைவுபடுத்துவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
மேலும், படத்தின் வெற்றியின் காரணமாக மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தது ரெட் ஜெயண்ட் நிறுவனம். இதையடுத்து படத்தின் வெற்றியை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், வடிவேலு ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி கூறினார் உதயநிதி. அண்மையில் சிறு வயது உதயநிதி கதாபாத்திரத்தில் (அதிவீரன்) நடித்த சூர்யாவை சந்தித்து அவரது கல்விக்கு உதவும் வகையில் லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கினார்.
தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்டனர். இந்நிலையில் மாமன்னன் படத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்த்து வாழ்த்தியுள்ளனர். மேலும் சி. மகேந்திரன் எழுதிய 'ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்' என்ற புத்தகம் மாரி செல்வராஜுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட மாரி செல்வராஜ், "மாமன்னனை விரும்பி வந்து பார்த்து வாழ்த்திய பெரும் மரியாதைக்குரிய தோழர்களுக்கு எங்கள் நன்றிகளும் ப்ரியமும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.