![dhanush](http://image.nakkheeran.in/cdn/farfuture/qII5QIu0K7alVZI1KDfSDUmxQn6YGiq-3SQf2TSxQQs/1619251389/sites/default/files/inline-images/6_43.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மாரி செல்வராஜ் அடுத்ததாக நீலம் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பதாக நடிகர் தனுஷ் நேற்று (23.04.2021) அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானது முதலே, இது ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவத்தொடங்கியது. இதுகுறித்து நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்களில் விசாரித்தபோது, "தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படம், ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அது முற்றிலும் வேறான கதை" என்கின்றனர். மேலும், இப்படத்தின் கதைக்கான கருவை மட்டுமே மாரி செல்வராஜ் தனுஷிடம் கூறியுள்ளதாகவும் முழுமையான கதை மற்றும் திரைக்கதை உருவாக்கும் பணிகளை மாரி செல்வராஜ் இனிதான் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். மாரி செல்வராஜ் அடுத்தாக இயக்கவுள்ள த்ருவ் விக்ரம் படத்தினை நிறைவு செய்த பின்னரே தனுஷ் படத்திற்கான பணிகளில் முழுவீச்சில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.