'சைரா: நரசிம்மா ரெட்டி' படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார் சிரஞ்சீவி. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுத் தொடங்கப்பட்டது.
பிரம்மாண்ட அரங்கம் என்றால் ஒரு ஊரையே அரங்கமாக அமைத்திருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகில் இதுபோ ஒரு செட் அமைத்ததே இல்லை என்று சொல்லப்படுகிறது. அதில்தான் படத்தின் 80% படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் அரங்கில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், 'ஆச்சாரியா' படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. அனைத்து நடிகர்களின் தேதிகளும் கிடைத்துவிட்டதால், நவம்பர் 9-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் 'ஆச்சாரியா' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தியுள்ளதாக சிரஞ்சீவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் டெஸ்ட் எடுத்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார்.