சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் ஆச்சார்யா திரைப்படத்தை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். சிரஞ்சீவி பிறந்தநாளின்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த சமயத்திலிருந்து ராஜேஷ் என்பவர் இது என்னுடைய கதை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என் கதையை படமாக எடுக்கிறது என்று குற்றச்சாட்டை வைத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ராஜேஷ் மண்டூரி என்பவரது கதையை (அண்ணய்யா என்று தலைப்பு வைக்கவிருந்த கதை) இயக்குனர் கொரட்டாலா சிவாவிடம் நாங்கள் சொல்லிவிட்டோம் என்ற குற்றச்சாட்டை எங்கள் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மறுக்கிறது. ராஜேஷின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது, பொய்யானது.
அவர் சொல்வது போல அவர் எங்களிடம் சொன்ன கதை அவ்வளவு நன்றாக இருந்திருந்தால் நாங்களே அதை முறையான நடிகர்களோடு தயாரித்திருப்போம். கடந்த ஒரு வருடத்தில் மூன்று புதுமுக இயக்குநர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தந்திருக்கிறோம். பரத் கம்மா - 'டியர் காம்ரேட்', ரிதேஷ் ரானா - 'மத்து வதலரா', சனா புச்சி பாபு - 'உப்பென்னா' (வெளியீடுக்கு தயாராக உள்ளது). எனவே கதை நன்றாக இருந்திருந்தால் இன்னொரு புதுமுக இயக்குநரை அறிமுகம் செய்ய வேண்டாம் என எது எங்களைத் தடுத்திருக்கும்?
எங்களிடம் சொல்லப்பட்ட கதை மிக பலவீனமாக இருந்தது, அதன் கரு சரியில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டது. இதுவே உண்மை. இது அவரிடமும் சொல்லப்பட்டது.
கதையே நன்றாக இல்லாத போது, அதைத்தழுவி எடுக்க வேண்டும் என கொரட்டாலா சிவா அவர்களிடம் நாங்கள் ஏன் சென்று சொல்ல வேண்டும். கொரட்டாலா சிவா மேதைமையான இயக்குனர், நல்ல கொள்கைகளும் தர்மங்களும் கொண்ட நல்ல மனிதர் என்ற நற்பெயரைப் பெற்றவர். எங்கள் பெயரையும், கொரட்டாலா சிவா அவர்களின் பெயரையும் கெடுக்க, எந்தவித ஆதாரமும் இன்றி இந்த ராஜேஷ் என்பவர் ஊடகங்களில் குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஊடகத்தில் அவரது செயல்பாட்டையும் மற்றும் உணர்ச்சி வசப்பட்டு அவர் பேசியதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவருக்கு எதிராக உடனடியாக எந்தவித தயக்கமுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அவரது குற்றச்சாட்டுகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் அவர் இப்படி மலிவான விஷயங்களைச் செய்து கவனம் ஈர்க்கவே பார்க்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளது.