கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண், அவர் உடல்நிலை சீராக உள்ளதாக விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல் நிலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி எஸ்.பி.பி உடல்நலம் குறித்து ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில்...
"பல கோடி ரசிகர்களின் அபிமானத்தை பெற்றவர், தேசமே பெருமைப்படும் அற்புதமான கலைஞன், என் சகோதரர் எஸ்.பி.பி, சிகிச்சையில் தேறி வருகிறார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன், அதை உங்களிடம் பகிர விரும்பினேன். திரைப்படங்களைத் தாண்டி, எஸ்.பி.பி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் எனக்கு பந்தம் உள்ளது. சென்னையில் நாங்கள் பக்கத்து பக்கத்து தெருவில் வசிக்கிறோம். நான் அன்பாக அவரை அண்ணாவென்று அழைப்பேன். எஸ்.பி.பியின் சகோதரிகள் சைலஜா, வசந்தா ஆகியோர் என்னை அண்ணனாக பார்க்கின்றனர். நான் சைலஜா, வசந்தா ஆகியோருடன் பேசி வருகிறேன். எஸ்.பி.பியின் ஆரோக்கியம் குறித்து அவர்கள் தொடர்ந்து எனக்கு தகவல் சொல்லி வருகிறார்கள். இன்றும் அவர்களுடன் நான் பேசினேன். பாலு நாளுக்கு நாள் நன்றாக தேறி வருகிறார் என்பது எனக்கு மன அமைதியை, சந்தோஷத்தை தருகிறது. அவர் மீண்டும் வர வேண்டும், பாடல்கள் மூலம் மகிழ்விக்க வேண்டும் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்களோடு நானும் இறைவனை வேண்டுகிறேன். அனைவரது பிரார்த்தனைகளும், இறைவனின் ஆசியும் அவரை குணமடையச் செய்யும். அவருக்காக நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் வேண்டுவோம்" என கூறியுள்ளார்.