காப்பான், துணிவு, அகிலன் உள்ளிட்ட படங்களில் மிரட்டிய நடிகர் சிராக் ஜானி அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
'துணிவு' படத்தை தமிழ்நாட்டு திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் மும்பையில் நான் படப்பிடிப்பில் இருந்ததால் அது முடியாமல் போனது. ஒரு வாரம் கழித்து மும்பையில் படம் பார்த்தபோதும் அஜித் சாரின் மீது அங்கும் மக்களுக்கு இருந்த கிரேஸ் புரிந்தது. கடலில் நடக்கும் குற்றங்கள் பற்றிய படம் இந்தியாவில் இதுவரை வந்ததில்லை. ஜெயம் ரவியின் 'அகிலன்' படம் அப்படிப்பட்ட ஒரு படமாக இருக்கும். தனக்கு எது வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்தார்.
துறைமுகங்கள் குறித்த புரிதல் இந்தப் படத்திற்கு முன்பு எனக்கு இல்லை. இந்தப் படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். ஜெயம் ரவி எனக்கு அண்ணன் மாதிரி. அவரும் என்னைத் தம்பி என்றே அழைப்பார். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. சுற்றி இருக்கும் அனைவரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வார். அவர் இருக்கும்போது செட் எப்போதும் கலகலப்பாக இருக்கும். மிகவும் டெடிகேட்டடான நடிகர். அகிலன் படத்தில் இதுவரை இல்லாத அளவு திரையில் அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். ஒரு நடிகராக அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.
தென்னிந்திய நடிகர்களுக்கு சிறப்பான திறமைகள் இயல்பிலேயே இருக்கின்றன. நட்சத்திர அந்தஸ்தை அவர்கள் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை. 'காப்பான்' படத்தில் மோகன்லால் சாரை முதலில் சந்தித்தபோது நான் அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகன் என்பதை அவரிடம் வெளிப்படுத்தினேன். அதிகமான புகழ்ச்சியை விரும்பாதவர் மோகன்லால் சார். 'தர்பார்' ஷூட்டிங்கில் ரஜினி சாரை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது மறக்க முடியாத அனுபவம். காப்பான் படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு அவரே என்னை அழைத்து சந்தித்தார். நான் ஒரு அழகான வில்லன் என்று பாராட்டினார்.
லோகேஷ் கனகராஜ் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். விக்ரம் படத்தைப் பார்த்துவிட்டு வியந்து போய் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். இந்திய அளவில் சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் லோகேஷ் ஒருவர். அவருடைய படங்களில் அனைத்து கேரக்டர்களுமே வித்தியாசமானவை. விக்ரம் படத்தில் கூட ஏஜென்ட் டீனா கேரக்டர் நம்மை சர்ப்ரைஸ் செய்தது. துணிவு படத்தில் அஜித் சாருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். அவர் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவர் போன்ற மனிதருடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மகிழ்ச்சி தான்.