பின்னணி பாடகி, டப்பிங் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் 'மீடூ' வில் புகார் அளித்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த இரண்டு பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடகி சின்மயி சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ள நிலையில் 96 தனது கடைசி படம் ஆக இருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் டப்பிங் கலைஞர் சங்கம் சார்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெறுவதால் சந்தா செலுத்த தேவையில்லை என்றும், தன் டப்பிங் பேசிய சம்பளத்தில் இருந்து 10% பணம் இதுநாள் வரை சங்கம் எடுத்துக்கொண்டுள்ளது. அதற்கு முறையான ரசீதுகள் எதுவும் தரப்படவில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.