சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் விடுதலை போராட்ட வீரரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான தியாகி கக்கன் திரைப்படத்தின் ஒலிநாடா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஒலிநாடவை வெளியிட்டார். இதனை தியாகி கக்கனின் மகள் கே. கஸ்தூரிபாயும், கக்கனின் பேத்தியும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜே.எம்.எச். அசன் மௌலானா, நா. எழிலன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, கக்கனின் மகள் கே. கஸ்தூரி பாய், கக்கனின் பேத்தியும் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவருமான எஸ். ராஜேஸ்வரி இ.கா.ப., இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர் ஜோசப் பேபி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திரைப்படம் சங்கர் மூவிஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. விழாவின் இறுதியில் படக்குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தியாகி கக்கன் நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கமிட்டி தமிழக தலைவர், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.