வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், தீர்ப்பில் சில கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
இதையடுத்து வரி பாக்கியைச் செலுத்திய விஜய், தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்ட கருத்துகளை நீக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் தனி நீதிபதி கூறிய கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தின எனக் கூறிய விஜய் தரப்பு, கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என்றும் தெரிவித்தது. மேலும், வரிவிலக்கு கோருவது என்பது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதால்தான் இந்த வழக்கைத் தொடர்ந்ததாகவும் விஜய் தரப்பு தெரிவித்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜய்யின் கோரிக்கைக்கு ஏற்ப தனி நீதிபதி சுப்பிரமணியனின் எதிர்மறையான கருத்துக்களை நீக்கி நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது.