தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்குமார், பைக் மற்றும் கார் ரேசிங்கிலும் ஆர்வம் கொண்டவர். சினிமாவைத் தாண்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதில் ஏற்படும் விபத்துக்களால் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று எந்த கார் ரேஸிலும் பங்கேற்காமல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்குமார் மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி கடந்த சில மாதங்களாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், 24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. அதன்படி முதலாவதாக துபாயில் நேற்று முன் தினம் (11.01.2025) முதல் நடைபெற்று வரும் 24ஹெச் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார். இதற்காக பயிற்சியின் போது அஜித்துக்கு விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் பதைபதைக்க வைத்தது.
இந்நிலையில், துபாயில் நேற்று (12-01-25) நடைபெற்ற 24 ஹெச் ரேஸில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 992 போர்ஷே பிரிவில் 3ஆவது இடம் பிடித்தது. இதனால், அஜித்குமார் மிகுந்த மகிழ்ச்சியோடு தனது வெற்றியைக் கொண்டாடி வருகிறார். மேலும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏந்தி துள்ளலாகக் கொண்டாடினார். அஜித்குமாரின் இந்த வெற்றிக்கு, திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், ‘வாழ்த்துக்கள் என் அன்பான அஜித்குமார். நீங்கள் சாதித்து விட்டீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். லவ் யூ’ எனத் தெரிவித்துள்ளார். அதே போல், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது, ‘துபாயில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் தலைமையிலான ‘அஜித்குமார் ரேசிங்’ அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர் கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த அஜித் குமார் அணியினருக்கும் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் (Spirit of the Race) விருது பெற்ற அஜித் குமாருக்கும் எனது பாராட்டுக்கள். அவரும், அவரது அணியினரும் மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது நல்வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார். அஜித்குமாரின் வெற்றியை அவரது ரசிகர்கள் பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.