'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது ‘மைதான்’ படம் வெளியாகும் அதே நாளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியாவதால் படக்குழு மீது தயாரிப்பாளர் போனி கபூர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் போனி கபூர். அதில்...
"கரோனா காலகட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே திரையுலகைச் சேர்ந்த அனைவரது வேண்டுகோளாக இருக்கிறது. இரண்டு பெரிய படங்கள் ஒரு தேதியில் வருவது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு. நான் என்னுடைய ‘மைதான்’ திரைப்படத்தின் தேதியை நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்து விட்டேன். ஆனால் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி நேற்றுதான் தீர்மானிக்கப்பட்டது. முடிவெடுக்கும் முன்னர் படக்குழுவினர் என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டியதுதானே அறம்.
பார்வையாளர்கள் பிரிவதால் விநியோகஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இங்கே சகோதரத்துவம் இல்லாதது போன்ற தோற்றம் உருவாகும். நான் ராஜமௌலிக்கு ஃபோன் செய்து பேசியபோது, படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பாளரின் கையில் இருப்பதாக கூறினார். நானும் ஒரு தயாரிப்பாளர்தான், ஒரு பிரச்சினையைக் கையிலெடுக்கும்போது முதலில் படக்குழுவினர், படத்தின் இயக்குநர், ஹீரோ ஆகியோரிடம் முதலில் ஆலோசிக்க வேண்டும் என்பதை நான் அறிவேன்" என்றார்.