சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் புதுப்படங்களை விமர்சித்து தனது யூடியூப் சேனலில் வெளியிடுகிறார். ப்ளூ சட்டை மாறன் என்றாலே அவர் படங்களை மோசமாக விமர்சிப்பார், நடிகர்கள், நடிகைகளின் நடிப்பை விளாசுவார் என்ற எண்ணம் உள்ளது. பெரிய நடிகர்களின் படங்களை கிழித்து தொங்கவிட்டு அவர்களின் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் அவர் திட்டு வாங்கியது எல்லாம் பல முறை நடந்துள்ளது. திட்டுபவர்கள், திட்டுங்கள் அதுவும் எனக்கு பப்ளிசிட்டி தான் என்று ஜாலியாக எடுத்துக் கொண்டுவிட்டார் மாறன். புதுப்படங்கள் ரிலீஸானால் ப்ளூ சட்டை மாறன் அந்த படத்தையும், நடிகர்களையும் திட்டுவதை பார்க்கவே ஒரு கூட்டம் உள்ளது. அவர் பாராட்டி விமர்சிப்பது என்பது அதிசயமான விஷயம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இயக்குநராகும் முயற்சியில் மிகத் தீவிரமாக இயங்கி வந்த மாறனின் பட அறிவிப்பு நேற்று பூஜையுடன் வெளியானது. வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படத்தை மாறன் இயக்குகிறார். இது குறித்து புளூ சட்டை மாறன் பேசுகையில், ‘படத்தில் நரேன், ராதாரவி, ‘வழக்கு எண்’ முத்துராமன் தவிர்த்து மீதி அனைவரும் புதுமுகங்களே நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே புதுமுகங்கள்தான். வாடி மாப்ள உனக்காகத்தான் வெயிட்டிங் போன்ற கமெண்டுகளை ரசித்துத்தான் பார்க்கிறேன். படங்களை விமர்சித்தோமே அதனால் ஒரு பயங்கரமான படத்தை எடுத்துவிட வேண்டும் என்கிற சுமையையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் ஒரு நல்ல படம் என்று பாராட்டு வாங்கக்கூடிய ஒரு படத்தை இயக்குவேன்’என்றார்.