ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு கருத்தையோ, அறிக்கையையோ வெளியிட்டுத் தன்னைப் பற்றிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அதேபோல திரையுலக பிரபலங்களும் அவ்வப்போது தங்களின் மீது ஊடக கவனம் இருக்க வேண்டும் என பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
மோடி பிரதமரான பின்பு, ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரபலங்களை கட்சியில் இணைத்து வருகிறது பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சியில் பா.ஜ.க. இல்லாவிட்டாலும், தன்னை பற்றிய விவாதம் நடைபெறும் சூழலை அந்தக்கட்சி உருவாக்கி வைத்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கங்கை அமரனை கட்சியில் இணைத்ததை தொடர்ந்து பல திரை நட்சத்திரங்களையும் இணைத்து வருகிறது.
ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் மாநில அளவில் பொறுப்பிலும் உள்ளனர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார் குஷ்பு. அப்போதிலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக சங்கீத கலைஞர் மோகன் வைத்யா கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் 3 போட்டியில் பங்குபெற்று, நடன இயக்குனர் சாண்டியுடன் செய்த அட்டகாசங்கள் காண்போர் பலரையும் கவர்ந்தது. தற்போது பாஜக தமிழக தலைவராக இருக்கும் எல்.முருகன் முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், “தாமரை மலர்ந்தே தீரும்” என்றும் கூறினார்.