Skip to main content

"அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிப்போம்" - பாரதிராஜா கொந்தளிப்பு!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

gfdgdgds

 

கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை போன்ற பிரச்சினைகள் உள்ளன. ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு அப்படியில்லாமல் நாம் நினைத்ததைப் படமாக்கி வெளியிட முடியும். இதனாலேயே இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக ஓடிடியில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய படங்களே அதிகளவில் வெளியாகி வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் இந்தப் படத்துக்குப் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்... 

 

"எங்கள் இனத்திற்கு எதிரான 'தி பேமிலி மேன் 2' இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக் களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும்  தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

vdbdbdvb

 

இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு. பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட வேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லிம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள். 'தி பேமிலி மேன் 2' தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

 

- பாரதிராஜா" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்