கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தது. அதன்பின் திடீரென அவர் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று அறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து எஸ்.பி.பியின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர். மீண்டும் எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அறிவித்தது. அவருடைய மகனான சரண், அடிக்கடி எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா எஸ்.பி.பி குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய பாலு, டேய் எஸ்.பி. பாலு எழுந்து வாடா. வாடா என்ற உரிமையை நீ எனக்கும், நான் உனக்கும் கொடுத்து 50 ஆண்டுக்காலம் ஆகிறது. பள்ளி நாட்களில் கூட நண்பர்களுடன் நான் இந்தளவுக்கு பழகியதில்லை.
எனக்கு இன்றும் நல்ல ஞாபகம் இருக்கிறது. 'ஆயிரம் நிலவே வா' உனது முதல் பாடல். நீ உச்சத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து கொண்டிருக்கிறாய். சிதம்பரம், வேலூர் என எங்கு எம்.எஸ்.வி கச்சேரி என்றாலும் உன்னுடைய பியட் காரில் தான் செல்வாய். அதற்கு டிரைவர் இல்லாமல் நீ தான் ஓட்டிக் கொண்டு போவாய். கூட நானும் வருவேன். ஏனென்றால் உனக்கு தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கதை சொல்லிக் கொண்டே நானும் வருவேன்.
உன்னிடம் ஒரு நாள் கே.விஸ்வநாத்திடம் என்னை உதவியாளனாக சேர்த்துவிடுடா என்று சொன்னேன். அப்போது நான் உதவி இயக்குநர் இல்லை. கதை வைத்திருக்கிறாயா என்ற கேட்டாய், ஆமாம் என்றவுடன் வேறு ஐடியா இருக்கிறது என்றாய். என்ன என்றவுடன் NFDC என ஒன்று உண்டு. ஒன்றரை லட்ச ரூபாயில் படம் எடுக்கலாம். அப்படியொரு திட்டம் இருக்கிறது என்று சொன்னாய்.
எனக்கு இப்போதும் நல்ல ஞாபகம் இருக்கிறது. பிரசாத் ஸ்டூடியோவில் ரெக்காடிங் தியேட்டருக்கு வெளியே புல்வெளியில் 'மயில்' என்ற கதையை உனக்குச் சொன்னேன். உனக்கு கதைப் பிடித்திருக்கிறது. 5000 ரூபாய் ஆரம்பச் செலவுக்கு எனக்குக் கொடுத்தாய். அப்போது தான் உனக்கு பல்லவி பிறந்திருக்கிறாள். நான் முதலில் பல்லவி புரொடக்ஷன்ஸ் என்று உன் மகளின் பெயரில் தான் ஆரம்பிக்கிறேன். சில காரணங்களால் அது நின்றுவிட்டது.
அதற்குப் பிறகு தொடர்ந்து நீயும், நானும் நட்பை வளர்ந்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முறை உனக்கு ஞாபகம் இருக்கிறதா.. கச்சேரிக்காக இளையராஜா, நான், பாஸ்கர் எல்லாம் போயிருந்தோம். உங்கள் வீடு ஆச்சாரமான வீடு. அங்குச் சாப்பிட்டோம். இரவு எங்களுக்கு சில பலவீனங்கள் உண்டு. "டேய்.. இது ஆச்சாரமான வீடு.. உதைத்துவிடுவேன் என்று எங்கள் கையில் காசு கொடுத்து சில இடங்களைச் சொல்லி அங்கு போங்கடா" என்று சொல்லிவிட்டாய். உன் வீட்டு உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறோம். அதுமட்டுமல்லடா.. எப்படிடா எங்களை விட்டுப் போக உனக்கு மனசு வரும். வராது. நீ திரும்ப வந்துருவ, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.
அதற்குப் பிறகு '16 வயதினிலே' பூஜை. அந்தப் பூஜைக்கு நீ தான் பாடவேண்டும் என்று சொன்னேன். நீயும் தயாராகிறாய். ஆனால், பூஜை அன்று உனக்கு தொண்டை சரியில்லை. மன்னிக்கணும் என்று சொல்லிவிட்டாய். இல்லையென்றால் 'செவ்வந்தி பூ முடிச்ச' பாட்டை நீ பாடியிருப்பாய். உன்னுடைய இடத்தில் மலேசிய வாசுதேவனை வைத்துப் பாடவைச்சேன்.
இதற்குப் பின்னால் 'நிழல்கள்' படத்தில் 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாடல் பாடினாய். இன்றளவும் உலகமே வியந்து கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு பாடல். நீ பொன்மாலைப் பொழுது பாடலாம், ஆனால் உனக்கு பொன்மாலைப் பொழுது வரக்கூடாது. உனக்கு பொன்காலைப் பொழுது தான் வரவேண்டும்.
பாலு நான் மட்டுமில்லடா. உலகத்திலுள்ள அத்தனை கலைஞர்களும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டு நாட்களாக நான் விட்டக் கண்ணீர் என் கன்னங்களில் வழியும் போது, அதை துடைத்து துடைத்து எறிந்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவில் கூட கண்ணீர் வந்துவிடக் கூடாது என்று நிதானமாகப் பேச முயற்சிக்கிறேன்.
பாலு வந்துருவடா.. நான் வணங்குகின்ற பஞ்ச பூதங்கள் அத்தனையும் உண்மையென்றால் நீ மறுபடியும் வருகிறாய், எங்களோடு பழகுகிறாய். இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில். வந்துருடா பாலு!” என்று தெரிவித்துள்ளார்.