சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சேவகர்'. இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் மோகன்.ஜி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கே.பாக்யராஜ் பேசும்போது, “தமிழ் ஆட்களை நம்பி இங்கே படம் எடுக்க வந்திருக்கும் கேரள தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. எங்கிருந்து வந்தாலும் தமிழ் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். இங்கே அப்படிப்பட்ட ஆட்கள் தான் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் இல்லை என்றால் இயக்குநர் இல்லை நடிகர் இல்லை என்று கே. ராஜன் சொன்னார் . கதை இல்லை என்றால் தயாரிப்பாளரே இல்லை . கதை இல்லை என்றால் சினிமாவில் எதுவுமே முடியாது. ஒருவருக்கு சினிமா பிடித்து விட்டது என்றால் அது விடவே விடாது. இந்தத் தயாரிப்பாளர் அப்படித்தான் இங்கே வந்திருக்கிறார் .
அவர் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வந்திருக்கிறார். இந்தப் படத்தை 25 நாட்கள் சிரமப்பட்டு முடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு செய்வது எத்தனை நாட்கள் என்பது முக்கியமல்ல. 16 வயதிலே படம் கூட 32 நாட்களில் எடுக்கப்பட்டது தான். எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது .எவ்வளவு நாட்கள் என்பதை வைத்துப் படத்தைப் பற்றி நாம் முடிவு செய்ய முடியாது. அப்படித் திட்டமிட்டு இந்த படத்தை திட்டமிட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளரை இந்தப் படம் காப்பாற்றும். சினிமா ஆசை யாரையும் விடாது என்பது பற்றி யோசிக்கும் போது ஒன்று நினைவு வருகிறது.
ஏற்காட்டில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒரு டாக்டர் அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் .அவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர் வீட்டில் மிருதங்கம் வைத்து வாசித்துக் கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர் சினிமா ஆர்வத்தில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தபோது அவர் படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தவர். அப்பா அவருக்காக பெரிய ஹாஸ்பிடல் கட்டியிருந்தார். ஒரு வழியாக அவரைச் சமாதானப்படுத்தி படிக்க வைத்து டாக்டர் ஆக்கி இருக்கிறார். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அவர் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு நான் ராசுக்குட்டி படத்தில் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடிக்க வைத்தேன். அவருக்கு அதில் மிகவும் மகிழ்ச்சி - அதுவும் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடித்தது மிக மிக மகிழ்ச்சி.
அதே போல் லால்குடி முனுசாமி என்பவர் இன்னொரு ரசிகர் . அவரை எல்லாரும் ஊமை என்பார்கள். அவர் என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வருவார். உதட்டு அசைவை வைத்து என்ன பேசுவது என்று கண்டுபிடிக்கும் லிப் ரீடிங் நன்றாக வரும். சரியாகச் செய்வார் . அவரை பவுனு பவுனுதான் படத்தில் டி டி ஆர் ஆக நடிக்க வைத்து என்னிடமே பேச வைப்பது போல் ஒரு காட்சியில் நடிக்க வைத்தேன். நான் எழுதிக் கொடுத்தபடியே உதட்டு அசைவு செய்தார். டிக்கட் இல்லாமல் வந்திருக்கிறாயே என்று என்னுடன் அவர் பேசுவது போன்ற காட்சி. அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து படத்தில் காட்டினோம். படமாக வந்த போது ஊரில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியம். அவர் எப்படிப் பேசினார் என்று. இப்படி சினிமாவில் நிறைய நிஜ கேரக்டர்களைச் சந்தித்து இருக்கிறேன்” என்றார்.