அண்மையில் இயக்குனர் பாரதிராஜா புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இது தமிழ் திரையுலகில் பலருக்கு அதிர்ச்சியளித்தது. தற்போது இதற்கு பலரிடம் இருந்தும் எதிர்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்களின் அவசர கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது “பாரதிராஜா புதிய சங்கம் தொடங்கி இருப்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை பிளவுப்படுத்தும் முயற்சி. இதனை அணிபாகுபாடு இல்லாமல் எல்லோரும் தடுக்க வேண்டும். இதுகுறித்து ஆலோசிக்க புதன்கிழமை காலை 11 மணிக்கு சங்க அலுவலகத்தில் கூடுகிறோம். அரசு அறிவித்துள்ள சமூக விலகலோடு நடைபெறும் இந்த ஆலோசனையில் தயாரிப்பபாளர்கள் கலந்து கொண்டு அரசு நல்ல முடிவு எடுக்க கோரிக்கை வைப்பதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்றார்.
தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரிக்கு தயாரிப்பாளர்கள் அனுப்பி உள்ள கடிதத்தில், “தமிழ் திரையுலகில் படப்பிடிப்பு, படம் வெளியீடு இவை எதுவும் இல்லாத இந்த காலகட்டத்தில் பாரதிராஜா புதிய தயாரிப்பாளர் சங்கத்தை பதிவு செய்து இருப்பது அரசுக்கு எதிரான நடவடிக்கை. எனவே சங்கத்தின் ஒற்றுமையை குலைக்கும் பாரதிராஜா மற்றும் அவருடன் இருக்கும் நமது சங்கத்தை சார்ந்த விஷமிகள் மீது சங்க விதியின் படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.