விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமிழரசன்'. இந்தப் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் இளையராஜா அவருக்கு எவ்வளவு முக்கியமானவராக செயல்பட்டார் என்பது குறித்து பேசினார்.
அதில், “இளையராஜாவுடன் முரண்பாடு ஏற்பட்டு, நிறைய இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துவிட்டேன். இன்றளவும் இனியும் அவரை மிஞ்சி ஒரு இசைக் கலைஞன் பிறந்து வருவது கஷ்டம். பாடல்கள் கூட பாடிவிடலாம். ஆனால், பின்னணி இசை என்பது ஒரு படத்துக்கு உயிர் நாடி. என்னுடைய படங்கள் பேசுகிறது என்றால், அது இளையராஜாவின் இசையால் மட்டுமே பேசும். எந்த இடத்தில் எந்த இசை இருக்க வேண்டும், எந்த அளவுக்குச் சப்தம் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிற ஒரே ஆள் அவர்.
படத்தில் ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தால் கூட பின்னணி இசையின் மூலம் உயிர் வர வைத்துவிடுவார். அவர் தமிழகத்துக்குக் கிடைத்தது மிகப்பெரிய விஷயம். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவருக்கு இணையான இசைக் கலைஞனைக் கண்டுபிடிப்பது கஷ்டம்” என்றார்.
இதே நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.