![Bala Saravanan](http://image.nakkheeran.in/cdn/farfuture/l3OdHX31IYrIid5FprT9UIGPmZE8FgntdBPi7MVxVVE/1645082445/sites/default/files/inline-images/1_380.jpg)
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'வீரபாண்டியபுரம்' திரைப்படம் இன்று வெளியானது. இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பாலாசரவணனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"வழக்கமாக அனைத்து படங்களிலும் என்னுடைய கதாபாத்திரம் காதலுக்கு ஐடியா கொடுக்கும் நண்பன் கதாபாத்திரமாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அதிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சுசீந்திரன் சாரின் மூன்று படங்களில் நடித்துவிட்டேன். அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நடிப்பு சார்ந்த நிறைய நுணுக்கங்களை சுசீந்திரன் சாரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். ஒரு நடிகராக அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கான தளமாக அவருடைய படங்கள் எனக்கு அமைந்தன.
நான் பெரிதாக எதையும் ஆசைப்பட்டு சினிமாவிற்கு வரவில்லை. கனா காணும் காலங்கள் ஆடிஷனில் நிற்கும்போது ஒரு எபிஸோடிலாவது நம் முகம் வந்துவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய அதிகபட்ச ஆசையாக இருந்தது. கனா காணும் காலங்கள் தொடரில் பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த நடிப்பை பார்த்து என்னுடைய அம்மா, அப்பா மிகவும் சந்தோஷப்பட்டதை பார்க்கும்போதே நான் நினைத்த வெற்றியை அடைந்துவிட்டேன். அதற்கு பிறகு எனக்கு கிடைப்பதையெல்லாம் கடவுள் கொடுக்கும் வரமாகத்தான் பார்க்கிறேன். இன்றைக்கு இருக்கும் இடத்தை தக்க வைத்துக்கொண்டால் போதும் என்றுதான் நான் நினைப்பேன். ஏதாவது படம் சரியாக போகவில்லை என்று மனம் தளர்ந்தால் நான் ஆரம்பித்த இடத்தை யோசித்து பார்ப்பேன். நான் ஆரம்பித்த இடத்தில் இருந்து பார்க்கும்போது இன்று நான் உள்ள இடம் கோடி மடங்கு பெரியது.
என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் சிவகார்த்திகேயன். என்னுடைய வாழ்க்கையில் வந்த தேவதூதராகத்தான் அவரை நான் பார்க்கிறேன். நண்பர், சகோதரர், மிக அன்பான மனிதர் என அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது அவருடன் நான் நடித்துக்கொண்டிருக்கும் டான் திரைப்படம் என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும். விஜய் டிவியில் இருந்தபோதே அவரை எனக்கு தெரிந்தாலும் அயலான் படத்தின்போது இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். நிறைய பேருக்கு உதவிகள் செய்கிறார். பல விஷயங்கள் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், நான் இதைச் செய்திருக்கிறேன், அதைச் செய்திருக்கிறேன் என்று தன்னுடைய வாயால் கூறவே மாட்டார். தன்னடக்கமான மனிதர் என்று அவரை பாராட்டுவதெல்லாம் மிகச் சாதாரணமான வார்த்தை. அதைவிட மிகமிக எளிமையான மனிதர். அவருடைய அந்த எளிமைதான் அவருடைய கம்பீரமே" எனக் கூறினார்.