பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை 'காளி' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு இருக்கிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் உ.பி மாநிலம் அயோத்தியில் உள்ள ஹனுமான் கோவில் சாமியார் ராஜூ தாஸ் மகாந்த் என்பவர் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பேசிய அவர், "சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை பாருங்கள், நுபுர் சர்மா சரியான கருத்தை கூறிய போதும் அது இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பெரும் நெருப்பை கிளப்பியது. இந்த நேரத்தில் நீங்கள் இந்து மதத்தை அவமதிக்க விரும்புகிறீர்களா? உங்கள் தலையை உடலில் இருந்து எடுக்க விருப்பப்படுகிறீர்களா? என்று கூறி மிரட்டியுள்ளார். அத்துடன் இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இயக்குநர் லீனா மணிமேகலைக்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் சரஸ்வதியை கோவை செல்வபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.