அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜவான்'. முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் ஒரு முன்னோட்ட நிகழ்வு நடந்தது. இதில் ஷாருக்கான், அட்லீ, ப்ரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர்.
அட்லீ பேசுகையில், "இந்த படம் நடக்க முக்கியமான காரணம் என்னோட அண்ணன், என்னோட தளபதி, விஜய் சார் தான். ராஜா ராணியில் வாழ்க்கை ஆரம்பிச்சுது. தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்துச்சு. லைஃப்பில் கம்ஃபோர்ட் சோனில் இருந்தபோது எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைச்சது. அப்போ விஜய் சார்கிட்ட கேட்டேன், 'நீ என்ன பண்ணுவியோ தெரியாது... கண்டிப்பா இந்த படம் பண்ணு' என்றார். அவர் கொடுத்த முதல் ஊக்கம் தான் என்னுடைய கம்ஃபோர்ட் சோனில் இருந்து வெளியே வந்தேன்.
நாம, நமக்கு பிடிச்ச மாதிரி ஓரமா தமிழ்நாட்டில் ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கோம். பாம்பேயிலிருந்து ஒரு கால். ஆலிஃப்-னு ஒருத்தர். எனக்கு ராஜா ராணியில் உதவி செய்தவர். அவர் ஃபோன் பண்ணி, 'ஒருத்தர் உன்னைய பார்க்கணும் பா' என்றார். 'நம்மள யார் சார் பார்க்க போறாங்க', 'ஷாருக்கான் சார் உன்னைய மீட் பண்ணனும்னு கேட்கிறார்', 'சார் காமெடி பண்ணாதீங்க' என்றேன்.
பின்பு மும்பை சென்றேன். போகும்போது எனக்கு பழைய நினைவுகள் வந்துட்டு போச்சு. எந்திரன் ஷூட் அப்போ ஷாருக்கான் சார் வீட்டு கேட் முன்னாடி நின்னு ஒரு ஃபோட்டோ எடுத்தேன். அதே கேட் 13 வருஷம் கழிச்சு நான் போகும் பொது திறக்குது. நாம அம்மா, கடவுள், மனைவியை நேசிச்சோம்னா... கடவுள் கண்டிப்பா நிறையவே கொடுப்பார். அது நடந்தது. ஷாருக்கான் சாரை பார்த்தேன். அப்போ என்னை 'அட்லீ சார்' என வரவேற்றார். அந்த பணிவு இப்போது வரை தொடர்கிறது. என்னை கேட்காமல் ஒரு விஷயமும் நடக்காது. என்னை கேட்டுத்தான் படத்தின் ஒவ்வொரு விஷயங்களும் நடந்துச்சு. இந்த விஷயம் என்னை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போச்சு. அவர் என் அப்பாவுக்கும் மேல். சொல்லப் போனால் அவர் தான் எல்லாமே.
நம்ம 6 மாசத்துல படம் பண்ணி, 7வது மாசத்துல ரிலீஸ் பண்ணி ஒரு ஹிட் கொடுத்துட்டு ரொம்ப ஜாலியாக சுத்திட்டு இருந்த ஒரு ஆள். அதற்கும் காரணம் விஜய் தான். ஆனால் இந்த படம் 8 மாசம் ஆகும் என நினைச்சேன். கோவிட் வந்திருச்சு. நான் விஸ்வாசமான தளபதி ரசிகன். கொடுத்த வார்த்தையை மாத்த முடியாது. இடைப்பட்ட காலத்தை எப்படி நிரப்புவது என தெரியவில்லை. படம் பெரிசாகிட்டே இருக்கு. அந்த நேரத்தில் மிகப்பெரிய முடிவு எடுத்தார்கள் தயாரிப்பாளர்கள். அதற்கு பெரிய நன்றி. அவர்களுக்காக என்னுடைய 3 வருஷ உழைப்பை கொடுத்திருக்கேன்" என்றார்.