மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி, வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான 'மாமன்னன்', வெற்றிகரமாக 50 நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
ஏ.ஆர். ரஹ்மான், பேசுகையில், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என ஆரம்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாதிரி வன்கொடுமைகள் எல்லாம் நிகழக் காரணம் என்னவென்று நீண்ட காலமாக யோசித்து வந்தேன். தனது 20 வருட இசைப் பயணத்தில், இசையின் மூலம் இதனை அணுக முடியவில்லை. அதனால் இந்த பிரச்சனைகளை சார்ந்து இயங்குபவரிடம் சேர்ந்து பணியாற்ற நினைத்தேன். அப்படி உருவானதே மாமன்னன். வடிவேலுவின் ஒரேயொரு காட்சியைப் பார்த்தவுடன், இந்தப் படத்தை வேறமாதிரி அணுகவேண்டும் என முடிவெடுத்தேன்" என்றார். ரஹ்மான் பேசியதை அடுத்து படக்குழுவினர்கள் சார்பாக அவருக்கு நினைவுப் பரிசாக மாமன்னன் படத்தின் பிரத்யேக மரச் சிற்பத்தையும், தந்தை தாயுடன் ரஹுமான் இருப்பது போன்ற புகைப்பட ஃபிரேமும் வழங்கிச் சிறப்பித்தனர்.