இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்பு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்து சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (10.09.2023) 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதில் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூட கடும் போக்குவரத்து பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும் கூறியிருந்தனர். மேலும் பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதோடு கூட்ட நெரிசலில் பலருக்கும் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் மோசமான நிகழ்ச்சி ஏற்பாடு எனக் குற்றம் சாட்டினர். இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், "கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என எக்ஸ் தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான் தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கிவிட்டு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் நகலை பகிரவும்" எனக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த மின்னஞ்சலில் ரசிகர்களின் குறைகளை குறிப்பிடுமாறும், அது குறித்து அவர்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சிலர் என்னை G.O.A.T ( Greatest Of All Time) என அழைப்பார்கள்; நாம் அனைவரும் விழித்துக் கொள்வதற்கு, இப்போது நானே பலி ஆடாக மாறுகிறேன்; உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு, திறமையான கூட்ட மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளிட்டவைகளுடன் சென்னையில் ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி தகுதியான திறமைகளை கொண்டாடுவோம்; இறைவன் நாடினால் நடக்கும்" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த இசைக் கச்சேரி ஏகப்பட்ட குளறுபடிகளை ஏற்படுத்திய நிலையில், அந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் தாம்பரம் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்துக்கு நெரிசல், அதிக கூட்டத்துக்கான காரணம், வாகனம் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவை குறித்தும் எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.