'உழவன்', 'காதல் தேசம்', 'காதலர் தினம்', 'காதல் வைரஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கதிர். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான 'காதல் வைரஸ்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில், அதன் பிறகு கதிர் இயக்கத்தில் தமிழில் எந்தப் படமும் வெளியாகவில்லை. கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு 'நான் லவ் ட்ராக்' என்ற கன்னடப் படத்தை இயக்கியிருந்தார். கடந்த காலங்களில் கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், இக்கூட்டணி 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது.
கதிர், அடுத்ததாக அறிமுக நடிகர் கிஷோர் என்பவரை வைத்து படம் இயக்கவுள்ளார். அவரது முந்தைய படங்கள் போலவே காதலை மையப்படுத்திய படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சென்னை, பெங்களூரு, மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.