ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் ஷங்கர் பேசுகையில், தற்போது இருக்கும் காலத்திற்கு ஏற்ப கேம் சேஞ்சர் படத்தை எடுத்துள்ளதாக கூறி இன்ஸ்டாகிராம் ரீல்ஸுடன் ஒப்பிட்டிருந்தார். இவரது பேச்சிற்கு தற்போது பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் தற்போது அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும் போது இது குறித்து பேசுகையில், “இன்றைய பார்வையாளர்களின் கவனம் மிகவும் குறைந்துவிட்டது. ஷங்கர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என தெரியவில்லை. படம் பார்த்தால் தான் தெரியும்.
பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று நீங்கள் சிந்திக்கத் தொடங்கினால், அந்த தருணம்தான் சரிவு தொடங்குகிறது. பார்வையாளர்கள் கடல் போல. அவர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் யூகிக்க முயற்சித்தால், நீங்கள் உண்மையிலேயே உங்களை கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்” என்றுள்ளார்.