ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் அனிதா சம்பத். இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் இன்று மரணமடைந்தார். இவர், தனது மகனுடன் இணைந்து சீரடி சென்றுள்ளார். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் ரயிலிலேயே இத்திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தன்னுடைய தந்தை குறித்து, அனிதா சம்பத் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது தந்தை ஆர்.சி.சம்பத் வயது முதிர்வு காரணமாகத் திடீரென மரணமடைந்தார். அவருக்கு அல்சர் பாதிப்பு இருந்தது. அவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளச் சென்றபோது அவரைச் சந்தித்தேன். பிக்பாஸ் முடிந்து வீடு திரும்புகையில், அவர் சீரடி சென்றுவிட்டார். நான் அவருடன் பேசவில்லை. ஏனெனில், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். இன்று காலை 8 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தேன். அவர் சீரடியில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். நாளை சென்னை வந்திருக்க வேண்டியவர்.
அப்பா, நீ வீட்டுக்கு நடந்துவரணும். உன்கிட்ட நிறைய பேசணும். உன்னுடைய குரல் கேட்டு நூறுநாளுக்கு மேல ஆச்சு. தெரிஞ்சிருந்தா முன்னாடியே பிக்பாஸில் இருந்து வெளியேறி, அப்பா கூட கொஞ்சநாள் இருந்திருப்பேன். விஜய் டிவி நிகழ்ச்சி திரும்ப வரும். என் அப்பா இனி திரும்ப வரமாட்டாரு. இந்த வாரம், நான் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால், கடைசியாகக் கூட அப்பாவைப் பார்த்திருக்க முடியாது. வாழ்க்கை கணிக்க முடியாதது. எல்லாம் ஒரு காரணங்களுடன்தான் நடக்கிறது. பெற்றோரைக் கவனித்துக்கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.