ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சொர்க்கவாசல். ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படம் சிறை வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. காமெடி கலந்த கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஆர்.ஜே பாலாஜி இந்தப் படத்தில் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேடையில் அனிருத் பேசுகையில், “படத்தின் இயக்குநர் விஸ்வநாத் என்னுடைய ஸ்கூல் ஜூனியர். அப்போது அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருப்பது தெரியாது. நான் சினிமாவில் பயணித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு நாள் டைரக்டர் ஆக வேண்டும் என சொன்னார். அப்புறம் அசிஸ்டண்டா சேர்ந்து ஒரு மூணு படங்கள் வேலை செஞ்சு, இந்த படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தின் கதையை சொன்ன போது, யார் நடித்தால் நல்லாயிருக்கும் என கேட்டார். என்னுடைய நண்பர் ஆர்.ஜே பாலாஜி இருந்தால் நல்லாயிருக்கும் என தோணுச்சு. இன்னைக்கு படம் பார்க்கும் போது பெருமையாக இருந்தது.
நான் இசையமைப்பாளராக ஆரம்பிக்கும் போது பாலாஜி எஃப்.எம்-மில் கொடி கட்டி பறந்தார். அதில் இருந்து எங்களுடைய கனெக்ஷன் ஆரம்பிச்சது. சினிமா துறையில் எனக்கு நண்பர்கள் கம்மிதான். அதில் எந்த பிரச்சனைக்கும் வந்து நிற்பது ஆர்.ஜே பாலாஜியும் ஒருவர். அவரிடம் எப்ப வேணாலும் சினிமாவை பற்றி பேசலாம். அவருக்கு ஒரு மாற்றத்தை இந்த படம் கொடுக்கும் என நம்புகிறேன். படத்தில் வேலை பார்த்த எல்லாருக்கும் சொர்க்கவாசலாக இந்தப் படம் இருக்கும் என வேண்டிக்கிறேன்” என்றார். பின்பு மேடையை விட்டு கீழே இறங்கிய அவர், திருப்பி மேடை ஏறி, “பதட்டத்துல ஒண்னு விட்டுட்டேன். செல்வா அண்ணா. அவர் இந்தப் படத்துக்கு ஒரு தூண் மாதிரி. என்னுடைய கரியரா இருக்கட்டும், என்னுடைய மியூசிக்கா இருக்கட்டும், அதில் முக்கிய பங்கு செல்வாராகவனுக்கு உண்டு” என்றார்.