கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மெனன், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் அனிருத்தும் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த நிகழ்ச்சிக்கு மியூசிக் டைரக்டராகவோ, கெஸ்டாகவோ வரவில்லை. உற்சாகப் படுத்த வந்திருக்கிறேன்” என்றார். அவரிடம் விடாமுயற்சி மற்றும் விஜய்யின் 69வது படம் குறித்து அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு, அந்தந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் கொடுப்பார்கள் என பதிலளித்தார். மேலும் லியோ படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை குறித்த அப்டேட்டிற்கு, விரைவில் வரும் என பதிலளித்தார்.
பின்பு நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், படக்குழுவினர் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து அவர்களை வாழ்த்தினார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசுகையில், “ஆன்லைனில், சோசியல் மீடியாவில் அடுத்த அவர் அவர்தான், அடுத்த இவர் இவர்தான் என சொல்வார்கள். நான் முன்னாடியே சொன்னதுதான் தலைவன் தலைவன் தான் தொண்டன் தொண்டன் தான். லவ் யூ சார்” என்றார்.
அதே மேடையில் அனிருத்துக்கு பிறகு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அதாவது அனிருத் கிளாசிக் இசையைக் கற்றுக்கொண்டு இசையமைத்தால் இன்னும் நீடித்து நிலைக்கலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.