ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி அதில் ஹீரோவாக நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் 'பாபா'. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க ரஜினியே தயாரித்தும் இருந்தார். மனிஷா கொய்ராலா, நம்பியார், விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் 'பாபா' படம் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீசாகவுள்ளது. நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ள இப்படத்தில் புதிதாக சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றும் பணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ரீ ரிலீசுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் வெளியான ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
2002ஆம் ஆண்டு 'பாபா' படம் வெளியான சமயத்தில் பா.ம.க தரப்பு, புகைபிடித்தல் மற்றும் மதுபான காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகக் கூறி படத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் இப்படம் ரீ ரிலீஸ் ஆகுவது தொடர்பாக, பா.ம.க-வின் தலைவர் அன்புமணி ராமதாஸிடம் ஒரு நிகழ்ச்சி தொடர்பாக அவர் பேட்டி அளித்திருந்த போது கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அன்புமணி, "நண்பர் ரஜினிகாந்த், சமுதாய பொறுப்புணர்வு கடமையுணர்வு அதிகம் கொண்ட நபர். நல்லது, கெட்டது எல்லாம் நன்றாக அவருக்குத் தெரியும். எது தவிர்க்க வேண்டும், எதை தவிர்க்கக் கூடாது என்பதும் அவருக்குத் தெரியும். மேலும் இந்த படத்தில் மட்டும் தான் அந்த விதமான காட்சிகள் வருகிறதா. வேறு எந்த படத்திலும் வருவதே இல்லையா? மற்ற படங்கள் எல்லாம் புத்தர் சம்மந்தப்பட்ட படமா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.