ஸ்ரீநாத் இயக்கத்தில் மைம் கோபி, மைத்ரேயா, துஷாரா விஜயன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அன்புள்ள கில்லி திரைப்படம் கடந்த 6ஆம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியானது. வித்தியாசமான முயற்சியில் நாய்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத்தை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
உனக்கென்ன வேண்டும் சொல்லு என்று முதலில் ஒரு படம் எடுத்தேன். அந்தப் படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு, பெரிய ஹீரோக்களை அணுகி கதை சொல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை. அவர்கள் மேனேஜரிடம் கதை சொல்லக்கூட வாய்ப்பு அமையவில்லை. அந்தச் சமயத்தில்தான் இந்த அமிகோ நாயை நான் தத்தெடுத்திருந்தேன். அந்த நாயை வைத்தே முழு படமும் ஏன் உருவாக்கக்கூடாது என்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே அமிகோவிற்கு அதற்கான பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு ஹீரோவை நம்பி பணத்தை முதலீடு செய்வதற்குப் பதிலாக இது மாதிரியான உயிரினத்தை நம்பி முதலீடு செய்யலாம் என்று நினைத்தேன்.
ஸ்ரீரஞ்சனி அவர்களின் பையன் மைத்ரேயா, துஷாரா விஜயன், மைம் கோபி, பூ ராம், இளவரசு என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அமிகோவை சின்ன வயதிலிருந்தே குழந்தைபோல வளர்த்து வருகிறேன். அமிகோ நடிக்கும் காட்சிகளை உதவி இயக்குநர்களைக் காட்சிப்படுத்தச் சொல்லிவிட்டு நான் அதனோடு இருந்து நடிக்க வைப்பேன்.
சினிமா படிக்க வேண்டும் என்பதற்காக 17 வயதிலேயே ஹாலிவுட் சென்று அங்கு முறையாக சினிமா படித்தேன். எடிட்டர், கலை இயக்குநர் என நிறைய வேலைகள் பார்த்துள்ளேன். நிறைய சின்ன பட்ஜெட் ஹாலிவுட் படங்களிலும் வேலை செய்துள்ளேன். தமிழ் சினிமாவில் படம் பண்ண வேண்டும் என்பதுதான் என் மனதில் எப்போதும் இருந்தது.
இந்தப் படம் நேரடியாக கலர்ஸ் சேனலில் வெளியானது. இது பெற்றோர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து குடும்பமாக பார்க்க கூடிய ஜாலியான படமாக இருக்கும். தமிழ் மட்டுமல்லாது இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் கலர்ஸ் மிகப்பெரிய சேனல் என்பதால் அன்புள்ள கில்லி திரைப்படம் நிறைய மக்களைச் சென்றடையும்.