அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா பர்தேஷி, நெப்போலியன், விதார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அன்பறிவு திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் அஸ்வின் ராமை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில், அன்பறிவு திரைப்படம் வேல் படம்போல இருக்கிறது என்று ரசிகர்கள் சிலர் அளித்த விமர்சனம் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
"இந்தப் படத்தை டபுள் ஆக்ஷன் படம் என்று நான் பார்க்கவில்லை. டபுள் ஆக்ஷன் என்ற கான்சப்டை தாண்டி கதையை ரொம்பவும் நம்பினோம். கதை எழுதும்போதே இரண்டு அண்ணன் தம்பிகள் என்று மட்டுமே யோசித்து கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எழுதினோம். இதை டபுள் ஆக்ஷன் படம் என்று நினைத்து எழுதியிருந்தால் அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் கூடுதலாக வந்திருக்கும். ட்ரைலர் பார்த்துவிட்டு நிறைய பேர் வேல் படம் மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். இதுக்கு பதில் சொல்லலாமே என்று என்னிடம் நிறைய பேர் சொன்னார்கள்.
பெரிய ஹிட் படத்தோடு நம் படத்தை ஒப்பிடுகிறார்கள். அதை ஜாலியாக ரசிப்பதைவிட்டு எதற்கு பதில் சொல்லணும் என நான் கூறிவிட்டேன். ஹரி சார் மாதிரியான மிகப்பெரிய இயக்குநர் எடுத்த படத்தோடு நம் படத்தின் ட்ரைலரை ஒப்பிடுகிறார்கள் என்றால் அதுவே மிகப்பெரிய அங்கீகாரம்தான். அதே நேரத்தில் படம் பார்க்கும்போது அப்படியில்லை என்று அவர்களுக்கு புரியும் என்றும் நம்பினேன். அதேபோல படம் வெளியான பிறகு யாரும் அது பற்றி பெரிதாக பேசவில்லை. சிலர் மட்டும் கூறினார்கள். அது அவர்களுடைய பார்வை. அதை நாம் மாற்ற முடியாது". இவ்வாறு இயக்குநர் அஸ்வின் ராம் கூறினார்.