இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சாமி 2'. அப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து 'அருவா' திரைப்படத்தை ஹரி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பின்னர், கதை தொடர்பான விவகாரத்தில் ஹரிக்கும் சூர்யாவிற்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படம் கைவிடப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, இயக்குநர் ஹரி, தன்னுடைய உறவினரும் நடிகருமான அருண் விஜய்யை நாயகனாக வைத்து படம் இயக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'அருண்விஜய் 33' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், ‘அசுரன்’ படத்தில் நடித்த அம்மு அபிராமி, இந்தப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.