‘தேவதாஸ்’, ‘கங்கா யமுனா’, ‘ஆன், தஸ்தான்’, ‘மொகல்-இ-அஸாம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார்.
இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப்பச்சன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்.. "ஒரு பல்கலைக்கழகமே மறைந்துவிட்டது. இந்திய சினிமாவின் வரலாறு எழுதப்படும்போதெல்லாம், அது எப்போதும் 'திலீப் குமாருக்கு முன்பும், திலீப் குமாருக்குப் பின்பும்' என்றிருக்கும். அவரது ஆத்மாவின் அமைதிக்காகவும், இந்த இழப்பைச் சுமக்க அவரது குடும்பத்தின் வலிமைக்காகவும் நான் துவா (பிரார்த்தனை) செய்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டுள்ளார்.