கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘ராம்’, ‘பருத்திவீரன்’, ‘ஆதிபகவன்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. படத்தை இயக்குவதில் கவனம் செலுத்திவந்த அவர், ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகமானார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அமீர் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் போஸ்டரில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களையும் குறிக்கும் விதமான சின்னங்கள் இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.